எங்கள் குலதெய்வம் அப்பச்சி
புதன், 28 அக்டோபர், 2009
ஆன்ம ஞானம் கிடைக்கிறது? இது ஏன்?
ஒரு மாமரத்தில் நிறையப் பழங்கள் பழுக்கின்றன. அதன் பயன் அதன் கொட்ட யிலிருந்து மற்றொரு மரம் தோன்றத்தான். ஆனால் ஒவ்வொரு மரத்திலிருந்தும் தோன்றும் அத்தனை பழங்களிலும் உள்ள எல்லா வித்துக்களும் மரமானால், உலகில் வேறு எதற்கும் இடம் இருக்காது ஒரு மரத்தில் கிடைக்கும் நூற்றுக்கணக்கான பழங்களில் ஒரே ஒரு வித்து மரமானாலும் நாம் திருப்தியடைகிறோம். மற்ற வித்துகள் வீணானதைப் பற்றி வருத்தப்படுவதில்லை. அதுபோல, நம்மில் கோடிக்கணக்கானவர்கள் ஆத்ம நலம் பெறாமல் போனாலும் யாராவது ஒரே ஒருவரின் ஆன்மா பூரணத்துவம் பெற்றால் அதுவே, மக்கள் அனைவரையும் காக்கும்.
உறியடி உற்சவத்தின் போது பலர் சறுக்கு மரத்தில் ஏறிச்சறுக்கினாலும் ஒருவன் எப்படியோ ஏறிவிடுவான். அப்படி ஒருவன் ஏறவே பலர் பிரயாசைப்பட்டு அந்த உற்சவத்தை நடத்துகிறார்கள். நம் உலக விளையாட்டும் அவ்வாறே. எத்தனை முறை சறுக்கினாலும் சறுக்கு மரத்தில் திரும்பத் திரும்ப ஏற முயல்வதைப் போல பூரணத்துவம் பெற முயன்று கொண்டே இருப்போம். கடவுள் யாருக்குக் கை கொடுத்து பூரணத்துவம் தர நினைக்கிறாரோ, அவரை பூரணமாக ஆக்கிவிடுவார். அதுவே நம் எல்லோரது முயற்சிக்குமான பலனாகும்.
புதன், 21 அக்டோபர், 2009
அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில்
கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் வழியில் உள்ள முலை
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
உம்பருலகேழும் கடலேழும் மலையேழும் ஒழியாமைமுனநாள் தம்பொன் வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்த தடமார்வர் தகைசேர் வம்புமலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ் நம்பன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே.
-திருமங்கையாழ்வார்
தலபுரணம்:திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.
|
அருள்மிகு நீலமேகப்பெருமாள் (மாமணிக் திருக்கோயில்
பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம் எனக்கர சென்னுடை வானாள் அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுந்தவெம் மண்ணல் வம்புலாஞ் சோலைமாமதில் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.
-திருமங்கையாழ்வார்
தலபுரணம்:பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், ""எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் "தஞ்சமாபுரி' எனப்பட்டது.தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.
அருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா?
-திருமங்கையாழ்வார்
தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சாரபுஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் 9 பாசுரங்களை பாடிவிட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடுஞ்செயல் புரிந்து வந்தார்கள். ஒருநாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள். இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.
தலபுரணம்: உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "சவுந்தரராஜப் பெருமாள்' என்றழைக்கப்படுகிறார். பெயர்க்காரணம்: நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சாரபுஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.
அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில்
திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம்
மங்களாசாஸனம் வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய வாளரவி னனை மேவிச் சங்கமா ரங்கைத் தடம லருந்திச் சாம மாமேனி என் தலைவன் அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்றெரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே.
-திருமங்கையாழ்வார்
பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கோவிலூர். 5.திருக்கண்ணங்குடி இத்தல தீர்த்தத்தின் பெயரைக்கேட்டாலே சகல பாவங்களும் விலகி விடும் என்பதால் இப்பெயர் பெற்றது. இத்தல பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். தாயார் லோக நாயகி முகமும், உற்சவர் அரவிந்த நாயகி முகமும் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார். "ஊராக் கிணறு, உறங்காபுளி, தேராவழக்கு திருக்கண்ணங்குடி' என்று இத்தலத்திற்கு திவ்ய தேச சிறப்பு பழமொழி உண்டு.
தலபுரணம்:கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். "கிருஷ்ணபிரேமை வசிஷ்டாய நாமா' என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர்,""அடே! அடே!''என விரட்டி சென்றார். திருக்கண்ணங்குடியை "கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,""வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்''என்றார். அதற்கு ரிஷிகள்,""கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்,''என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களை பற்றிக்கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதையறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர்.கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் "கண்ணங்குடி' ஆனது.
அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் மங்களா சாஸனம்
இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.
-நம்மாழ்வார்
தலபுரணம்:முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் "அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.
அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்
திருமங்கையாழ்வார். மங்களாசாஸனம்
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்.
-திருமங்கையாழ்வார்.
தலபுரணம்:
பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.
அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.
-திருமங்கையாழ்வார்
தலபுரணம்:பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம்,""அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்,''என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். ""தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது,''என காவிரி கூறியவுடன், கருடவ வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, "வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி,""தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்,''என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.
அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
-திருமங்கையாழ்வார்
தலபுரணம்:மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புரு÷ஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், ""தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்,'' என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், ""நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்'' என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் "நாச்சியார் கோயில்' என்ற பெயரும் பெற்றது.
அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள திருநாகேஸ்வரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பஸ் வசதி உண்டு.
பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசசனம்
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல் வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்.
-பேயாழ்வார்
தலபுரணம்:மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், ""எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம், ""நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், ""சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்
ஆண்டாள், பொய்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே
-ஆண்டாள்
அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
இடரான வாக்கை யிருக்க முயலார் மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு நாதனூ ராதரியார் நானெனதென்னார மலன் ஆதனூர் எந்தை யடியார்.
-திருமங்கையாழ்வார்
ஏடு, எழுத்தாணி பெருமாள்: திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பணியாளர் களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ் வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கையாழ்வாரிடம், "உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்' என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி ""இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக்கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்'' என்றார். திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், "மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்' என்றார்.திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் "நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?' என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.
படியளக்கும் சுவாமி: கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளிகொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.
மோட்சம் தரும் தூண்கள்: பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும்,திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.
தலபுரணம் :பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி "தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்' என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.
அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான் குறிய மானி யுருவாய கூத்தன் மன்னி அமருமிடம் நறிய மலர்மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே.
-திருமங்கையாழ்வார்
ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமன் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் "திருப்புள்ள பூதங்குடி' ஆனது. வைணவ சம்பிராத யத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளபூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித் தார்கள். ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை, "அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே' என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயு விற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் "வல்வில் ராமன்' என அழைக்கப்படுகிறார்.
தலபுரணம்:
சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ""ராமா, ராமா'' என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்
திருமழிசை ஆழ்வார் மங்களாசாஸனம்
கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ மாற்றமும் சாரா வைகயறிந்தேன்- ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு
-திருமழிசையாழ்வார்
இத்தலபெருமாளை ஆழ்வார், "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக் கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான், பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.
தலபுரணம் :
இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியி ருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,""மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பவிமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, ""நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன்,""ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,""நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியர்,""கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்,''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித் ததாக வரலாறு.
அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ ரேற்றா னெந்தை பெருமானூர் போல் சேற்றேர் உழவர் கோதை போதூண் கோற்றேன் முரலுங் கூடலூரே.
-திருமங்கையாழ்வார்
தலபுரணம் :
இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமாதேவியுடன் சண்டையிட்டு பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை "புகுந்தானூர்' என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் "வையங்காத்த பெருமாள்' எனப்படுகிறார்.
அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்
திருமங்கையாழ்வார். மங்களாசாஸனம்
பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்துண்ணும் உண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும் கண்டியூர ரங்கம் கச்சிபேர் மல்லை யென்று மண்டினார் குயலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே.
-திருமங்கையாழ்வார்
சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்' என்றழைக் கப்படுகிறார். பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது. இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டார். அவருக்கு "கண்டீஸ்வரர்' எனப் பெயர். இத்தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு கோயில் கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள்பாலிக்கிறார். "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர் கண்டியூர் அருகிலுள்ள திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர். இவர் இத்தல பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். திருமங்கையாழ்வார் இத்தலத் தில் பாடிய பாடலில் இங்குள்ள பெருமாளை, ஸ்ரீரங்கம் பெருமாள், காஞ்சி பெருமாள், கோயிலடி பெருமாள் ஆகிய பெருமாள்களுடன் ஒப்பிட்டு பாடுகிறார்.
தலபுரணம் :
வனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு. இதே போல் பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது. அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையை கிள்ளியெறிந்தார். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை தொலைக்க, கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார். ஒரு இடத்தில் அந்த கபாலம் விழுந்தது. அங்கே விஷ்ணு இருந்தார். அந்த தலமே பூரணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்.
அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாஸனம்
பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும் ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே
-நம்மாழ்வார்
தல வரலாறு:
உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர்,""மன்னா! பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்,''என்றார். இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன்,""ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,''என கேட்டான். அதற்கு அவர்,""எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,''என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்ந்தது என தல வரலாறு கூறுகிறது.
அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்
திருமழிசையாழ்வார் மங்களாசாஸனம்
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில்-நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான்.
-திருமழிசையாழ்வார்
தல வரலாறு:
ஒருசமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் நாம்தான் அனைவரிலும் அழகானவர் என்ற ஆணவம் உண்டானது. மேலும், அனைவரையும் படைக்கும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. பிரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு, அவரது ஆணவத்தை விட்டுவிடும்படி சொல்லிப்பார்த்தார். பிரம்மாவோ கேட்பதாக இல்லை. எனவே, அவரை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்துவிட்டார் மகாவிஷ்ணு. பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் சுவாமியை எண்ணி தவம் இருந்தார். அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன்பு வந்தார். அவரைக் கண்ட பிரம்மா, "இவ்வளவு அழகான எவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லையே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்ணு, "அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்ட குணங்களையும் கொண்டிருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை' என உபதேசம் செய்து, பள்ளிகொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் மகாவிஷ்ணு. உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக, விஷ்ணு இத்தலத்தில் பள்ளிகொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார். பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் "அன்பில்' என்ற பெயரும் பெற்றது.
அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில்
திருச்சி-துறையூர் சாலையில் 20 கி.மீ தூரத்தில் திருவெள்ளறையில் இக்கோயில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து திருவெள்ளறைக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
திருமங்கையாழ்வார், பெரியாழ்வார். மங்களாசாஸனம்
ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம் வேறு வேறுக வில்லது வளைத்தவனே எனக்கருள் புரியே மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே.
-திருமங்கையாழ்வார்
108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான் அவதாரம் செய்துள்ளார். இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது. பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி "தட்சிணாயணம்' ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி "உத்தராயணம்' தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலிபீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொண்டு, நிறைவேறிய பின் "பலிபீட திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் "புத்ரபாக்கியம்' நிச்சயம் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.
தல வரலாறு:
ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட் சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், ""லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்'' என்கிறார். அதற்கு லட்சுமி, ""தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு'' என்கிறாள்.இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், ""உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்'' என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர்,""நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்'' என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம்,"" நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்'' என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர்,""உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக'' என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
அருள்மிகு உத்தமர் திருக்கோயில்
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே
-திருமங்கையாழ்வார்.
சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் "பிச்சாண்டார் கோயில்' என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் "கதம்பனூர்' என்றும் "கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக் கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்த லத்தை "உத்தமர் கோயில்' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை
தல வரலாறு:
சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்..
செவ்வாய், 20 அக்டோபர், 2009
அழகிய மணவாளர் உறையூர், திருச்சி
பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா
-திருமங்கையாழ்வார்
தலபெருமை:
மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு சுவாமி, தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர். திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது. பரமபதவாசல் கடக்கும் தாயார்: பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி நடக்கிறது. ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று இவள் சொர்க்கவாசல் வழியே செல்கிறாள். பங்குனி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்.எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று, சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப, சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார். பங்குனி உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் சுவாமி, இரண்டு தாயார்களுடன்சேர்ந்து காட்சி தருவதை தரிசிப்பது விசேஷம். தல வரலாறு: ரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, "கமலவல்லி' (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண் டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச்சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.