எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

புதன், 21 அக்டோபர், 2009

அருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்

நாகப்பட்டினம் பஸ்ஸ்டாண்டிலிருந்து தெற்கே 1 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா?

-திருமங்கையாழ்வார்

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சாரபுஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் 9 பாசுரங்களை பாடிவிட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடுஞ்செயல் புரிந்து வந்தார்கள். ஒருநாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள். இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.

தலபுரணம்:

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "சவுந்தரராஜப் பெருமாள்' என்றழைக்கப்படுகிறார்.

பெயர்க்காரணம்: நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சாரபுஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக