எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

வியாழன், 8 அக்டோபர், 2009

அரண்மனைகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரண்மனைகள் பல இன்று அழிந்து வருவதால் இதனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயநகரப்பேரரசு காலத்திலும், மதுரை நாயக்கர் ஆட்சியிலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்தது. 1502 ல் போர்த்துக்கீசியர்கள் வருகைக்குப்பின் கிழக்கு கடற்கரையில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முத்துகுளித்தல் மற்றும் கடல் வாணிபத்தை தங்களது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தனர்.
இதன் மூலம் முத்துக்குளித்தல் தொழிலில் செல்வத்தை அள்ளிய போர்த்துக்கீசியர்கள் இக்கடல் பகுதியில் சென்ற படகுகளுக்கு வரிவசூலும் செய்து வந்தனர். 1601ல் மதுரையை ஆட்சிசெய்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் தனது கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் போர்த்துக்கீசியர்கள் வரி வசூலிப்பதை தடுக்கவும், அதே நேரத்தில் இராமேஸ்வரம் வந்து செல்லும் பக்தர்களை துன்புறுத்தும் கொள்ளையர்களிடமிருந்து வடமாநில யாத்ரீகர்களை பாதுகாக்கவும் முடிவு செய்து மறவர் சீமைக்கு உடையான் சேதுபதியை அரசு பிரதிநிதியாக நியமித்தார். நாயக்கரின் அதிகாரம் பெற்ற உடையான் சேதுபதி கொள்ளையர்களை அடக்கியதோடு மன்னார் கடல் பகுதியில் முத்துக்குளித்தலையும் கண்காணித்து வந்தார். அன்று முதல் மறவர் சீமையில் சேதுபதிகளின் ஆட்சி துவங்கியது. சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கோயில் பணி, கொடையிலும் சிறந்து விளங்கிய சேதுபதிகள் கடல் கடந்த வாணிபம், கோயில் பணிகளுக்காக,
- போகளூர் - கமுதி - சுந்தரமுடையான் - இராமநாதபுரம் - மானாமதுரை - கல்கோட்டை - அத்தியூத்து - பாம்பன் - இராமேஸ்வரம்
போன்ற பகுதிகளில் அரண்மனை மற்றும் கோட்டைகளையும் கட்டினர். ஆனால் தற்போது அரண்மனைகள், பாதுகாப்பு அரண்களாக விளங்கிய கோட்டைகள் பல சிதைந்து இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி உள்ளது. கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்ட இராமநாதபுரம் அரண்மனை உட்பட இப்பகுதியில் உள்ள பல அரண்மனைகள் சிதிலமடைந்த நிலையில் இன்றளவும் சேதுபதி மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் நினைவுச்சின்னங்களாக காட்சி அளிக்கின்றன. 1627ல் இரண்டாம் உடையான் சேதுபதி காலத்தில் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் கட்டப்பட்ட துறைமுகத்துடன் கூடிய சுந்தரமுடையான்புரம் அரண்மனையும் சிதிலமடைந்து உள்ளது. 1637ல் சேதுநாட்டின் மீது படையெடுத்த திருமலை நாயக்க மன்னரின் தளவாய் இராமப்பையன் படைகள் போகலூர், அரியாண்டிபுரம், அத்தியூத்து கோட்டைகளை கைப்பற்றி கிழக்கு பகுதியில் முன்னேறிச் சென்றபோது சுந்தரமுடையான்புரம் அரண்மனையும் தாக்குதலுக்குள்ளானது. அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த இந்த அரண்மனையின் முன்பு இராமர் கோயில் இருந்ததால் இப்பகுதி மக்களால் இன்று வரை இராமசாமி கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
[image: http://img.dinamalar.com/data/images_news/tblSambavamnews_77471125126...] இதை தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு செய்தால் இராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதிகள் ஆட்சி காலத்தில் நடந்த கடல் வணிகம், கடல் போர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகும். சிதிலமடைந்த அரண்மனையை பராமரித்து நினைவுச் சின்னமாக்கினால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள சீனியப்பா தர்ஹாவை வணங்கி செல்வதுடன் சுந்தரமுடையான் அரண்மனையையும் பார்த்து செல்வர். இதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக