சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.
செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.
பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.
அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.
பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.
மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.
சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 80002. திருமூலர் சிற்ப நூல் – 10003. திருமூலர் சோதிடம் – 3004. திருமூலர் மாந்திரிகம் – 6005. திருமூலர் சல்லியம் – 10006. திருமூலர் வைத்திய காவியம் – 10007. திருமூலர் வைத்திய கருக்கிடை – 6008. திருமூலர் வைத்திய சுருக்கம் – 2009. திருமூலர் சூக்கும ஞானம் – 10010. திருமூலர் பெருங்காவியம் – 150011. திருமூலர் தீட்சை விதி – 10012. திருமூலர் கோர்வை விதி – 1613. திருமூலர் தீட்சை விதி – 814. திருமூலர் தீட்சை விதி – 1815. திருமூலர் யோக ஞானம் – 1616. திருமூலர் விதி நூல் – 2417. திருமூலர் ஆறாதாரம் – 6418. திருமூலர் பச்சை நூல் – 2419. திருமூலர் பெருநூல் – 3000
போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
திருமூலர் வரலாறு நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
புதிய கருத்துகள் அனுமதிக்கப்படுவதில்லை.