எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

புதன், 21 அக்டோபர், 2009

அருள்மிகு உத்தமர் திருக்கோயில்

இருப்பிடம்: திருச்சி - சேலம் செல்லும் வழியில் 5 கி.மீ., தூரத்தில் இக்கோயில் இருக்கிறது. பிச்சாண்டார் கோவில் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லலாம்.

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே

-திருமங்கையாழ்வார்.

சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் "பிச்சாண்டார் கோயில்' என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் "கதம்பனூர்' என்றும் "கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக் கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்த லத்தை "உத்தமர் கோயில்' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை

தல வரலாறு:

சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக