எங்கள் குலதெய்வம் அப்பச்சி
புதன், 7 அக்டோபர், 2009
கிழவன் சேதுபதிக்கும் முந்திய கால வரலாறு
தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தகளில் 'அம்மானை' என்னும் ஒரு வகையும் உண்டு. இது சற்றுப் பழைமையானதுதான். இரு பெண்களுக்கு இடையில் ஏற்படும் கருத்துப் பரிமாற்றம் போல அமைந்திருக்கும். அம்மானை என்பது பெண்கள் விளையாடுமொரு விளையாட்டு. அம்மானைப் பாடலில், முதலில் ஒரு பெண் ஒரு கருத்தைச் சொல்வாள்; அடுத்து, இன்னொரு பெண் அதற்குப் பதிலைச் சொல்வாள்; அல்லது வெட்டியோ ஒட்டியோ ஒரு கருத்தைச் சொல்வாள். அடுத்தாற்போல முதற்பெண் அதை ஒட்டியோ வெட்டியோ, அல்லது முற்றிலும் வேறொரு கருத்தையோ சொல்வாள். இப்படியே செல்லும். மாணிக்கவாசகர் அம்மானை பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடியுள்ள திருப்பதிகங்களில் சிலவற்றில் அம்மானை வாசனை அடிக்கும். ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திக்கும் இடையே ஒரு வாக்குவாதம் நடைபெற்றதாகவும், அது அம்மானை வடிவத்திலேயே நடந்ததாகவும் வினோதரசமஞ்சரி போன்ற நூல்களில் காணலாம். 'கோரத்துக்கொப்போ கனவட்டம் அம்மானை', என்று அந்த அம்மானை போகும். ஆனால் இது அந்த சம்பந்தப்பட்ட இரு புலவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பாஷணை என்ற பெயரில் பிற்காலப்புலவர்கள் யாராவது கதையை இட்டுக்கட்டிவிட்டிருக்கலாம். தமிழின் சிறப்பழிந்து போன காலகட்டத்தில் சில இலக்கிய வகைகள் பிரபலமாகின. தூது, காதல், சண்டை, போன்றவை. அப்போது அம்மானை என்ற பெயரிலும் பல நூல்கள் தோன்றின. ஆனால் இவை 'அம்மானை' இலக்கணத்தில் அடங்க மாட்டா. அவற்றிற்குரிய ட்ரேட் மார்க்காகிய 'அம்மானை' என்னும் சொல்லோ, முன்னவள் சொன்னதைப் பின்னவள் ஒட்டியோ வெட்டியோ சொல்வதுபோன்ற தோரணையையோ இவற்றில் பார்க்கமுடியாது. ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும். பிற்காலத்து அம்மானைகளில் பிரபலமாக விளங்குபவை, 'சிவகங்கைச்சீமை அம்மானை, இராமப்பய்யன் அம்மானை' ஆகியவை. ஏன்? Simple reason. அச்சில் வந்துவிட்டன. அதான். ஏட்டிலேயே இருந்திருந்திருந்தால் எவன் அதைப் பற்றியெல்லாம் சீந்தியிருக்கப்போகிறான்? இந்த நூலின் முக்கியத்துவம் என்ன? இது ஒரு வரலாற்று நூல். அது சொல்லவந்த நிகழ்ச்சிகளைக் கோர்வையாக தொகுத்து பாடலாக - சிறுகாப்பியமாக - வடித்துக்கொடுக்கிறது. அதன் historicity ஓரளவுக்குக் கச்சிதமாக இருக்கிறது. ஹோமர் காலத்திலிருந்து ballads என்னும் மரபு இருந்திருக்கிறது. அது செவி வழியாகவே வந்துகொண்டிருக்கும். சங்க காலத்தில் பாணர்களும் இந்த மாதிரி ballads-களைப் பாடியிருக்கவேண்டும். சும்மா "ஒம் மூக்கு நல்லார்க்கு; சோக்கு நல்லார்க்கு", என்று மட்டும் பாடிக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள். They were bards. ஆகவே கிரேக்கத்திலும் ரோமத்திலும் அந்த bards என்னவெல்லாம் செய்தார்களோ அவற்றையெல்லாம் இவர்களும் செய்திருப்பார்கள். அந்த மரபை முன்னிட்டு, இராமப்பய்யன் அம்மானையும் செவிவழியாக வழங்கி, அதனை யாராவது புலவர் ஏட்டில் எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின், இதன் historicity இன்னும் வியக்க வைக்கிறது. அக்காலப் பழக்கவழக்கங்கள், சொல்மரபுகள், பாளையங்களின் பட்டியல், அரசர்கள், போர்முறைகள் போன்றவற்றை தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. முதலில் அந்த நூலின் பின்புலத்தைச் சொல்லிவிட்டு, அதன் கதைச்சுருக்கத்தையும் சொல்லி, சித்திரவதை, கொடுங்கோன்மை முதலியவற்றைக் குறிப்பிட்டுச்சொல்கிறேன். irAppayyan ammAnai #2 இராமப்பய்யன் அம்மானை #2 மதுரையை நாயக்கர்கள் ஆண்டுகொண்டிருந்தபோது, 'சேது நாடு' எனப்படும் இராமநாதபுரம் சீமையைச் 'சேதுபதி' என்னும் மரபினர் ஆண்டுவந்தனர். இவர்கள் பாளையக்காரர்களைவிட உயர்மட்டத்தில் உள்ளவர்கள். அவர்களுக்கு மன்னர்களுக்குரிய அந்தஸ்து இருந்தது. ஆனாலும் அவர்கள் மதுரை நாயக்கரின் கீழ், கப்பம் கட்டிக்கொண்டும், படை உதவி புரிந்துகொண்டும் இருந்தார்கள். மிகவும் திறமையான இத்தாலிய, டச்சுக்கார தளபதிகளால் நவீனமான முறைகளில் பயிற்சி கொடுக்கப்பட்ட சிறந்த படைகள் சேதுபதிகளிடம் இருந்தன. அப்போதைய நவீன ஆயுதங்களாகிய துப்பாக்கிகளும் அவர்களிடம் நிறைய இருந்தன. சடைக்கன் சேதுபதி காலத்தில் அவர் மதுரைநாட்டுக்கு மிகக் கஷ்டமான சமயத்தில் பெரும் படையுதவி செய்து மதுரையைக் காத்தார். ஆகவே அவருக்குத் 'தளவாய் சேதுபதி' என்ற பட்டமும் இருந்தது. மதுரை நாட்டிற்கு அடங்கித்தான் போகவேண்டும் என்ற நிலை சேது நாட்டுக்கு இல்லை. ஆகவே சில சமயங்களில் சேதுபதிகள் மதுரையை மீறுவார்கள். அப்படியொரு முறை மீறியபோது, மதுரை அனுப்பிய படைகளை சடைக்கன் சேதுபதி வென்றழித்தார். ஆகவே அவரவர் பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும் என்று திருமலை நாயக்கர் கண்டும் காணாது விட்டுவிட்டிருந்தார். சடைக்கன் சேதுபதி என்பவர் திருமலை நாயக்கர் காலத்தில் சேதுநாட்டை ஆண்டார். அவருடைய தந்தை, கூத்தன் சேதுபதிக்கு காமக்கிழத்தி மூலம் பிறந்த மகன் ஒருவர் இருந்தார் - தம்பித்தேவர். அவர் சேதுநாட்டைப் பாகம் பிரித்துத் தரச்சொல்லி அழுத்தம் கொடுத்துவந்தார். அவருக்கென்று மதுரை நாட்டின் அரசில் சில contacts and connections இருந்தன. இவ்வாறு இருக்கும்போது, சடைக்கத்தேவரின் மீது பல புகார்களை நாயக்கரிடம் மதுரைநாட்டின் தளவாயாகிய ராமப்பய்யர் எடுத்துக்கூறி தாமே சடைக்கத்தேவரின் மீது படையெடுத்துப் போக உத்தரவு கேட்டார். ஆனாலும் மதுரை நாடு இருக்கும் நிலையையும் சேதுநாட்டின் வலுவைக் கருதியும் அதற்கு நாயக்கர் ஒப்பவில்லை. இருப்பினும் நாயக்கரை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாங்கி விட்டார். சடங்கு பூர்வமாக அதனை அக்காலத்தில் செய்தார்கள். 'சன்னத்து வழங்கல்' என்பார்கள். அதன் பின்னர் தெய்வவழிபாடு செய்துவிட்டு, பாளையக்காரகள் அனைவரையும் படை கொண்டு வரச்சொல்லி தாக்கீது அனுப்பி, படைகளைக் கூட்டினார். இதனைத் 'தண்டு எடுத்தல்' என்பார்கள். முதலில் சின்ன ராவுத்தர் பாளையம் என்னுமிடத்தில் படைகளைத் தங்க வைத்தார். இதனைப் 'பாளையம் இறங்குதல்' என்றும் 'பாடி கொள்ளுதல்' என்றும் சொல்வார்கள். அங்கிருந்து மானாமதுரை சென்றான். அங்கே மாவலி வாணன் கட்டிய ராசகம்பீரப் பெருங்கோட்டை இருந்தது. சுற்றிலும் காவற்காடு. ஆயிரம் பேரை விட்டு அவற்றையெல்லாம் அழிக்கச் சொன்னான். 'காடுவெட்டி, முள் பொறுக்கிக், கட்டையறவே பறித்து ராசகெம்பீரன் நல்ல பெருங்கோட்டைதனை ஏறிட்டுப்பார்த்தார்'. அறுநூறு யானைகள் ஆறாயிரம் குதிரைகள், எழுநூறு ஒட்டகங்கள் கொண்ட படையுடன் தளத்திலிருந்தான். இந்தச் செய்தியறிந்த சடைக்கத்தேவர் வெகுண்டெழுந்து, தம்முடைய மருமகனாகிய வன்னியத்தேவரை அழைத்து, அவரிடம் சொல்லி சேதுப்படைகளைக் கொண்டு ராமப்பய்யன் படைகளை வென்று அழிக்குமாறு ஆணையிட்டார். இரண்டு நாட்கள் நடைபெற்ற சண்டையில் நாயக்கர் படைக்கு அதிகச் சேதம் ஏற்பட்டது. உடனே அத்தனை பாளையத்து சேனைகளுடன் முஸ்லிம்களின் குதிரைப் படையினரையும் சேர்த்து ராமப்பய்யன் ஏவிவிட்டான். போகலூர் என்னுமிடத்தில் வன்னியத்தேவர் பெரும் வெற்றி பெற்றார். ஆனால் எத்தனை நாள் இவ்வாறு பெரும்படையுடன் பொருதி நிற்கமுடியும். அரியாசைபுரக்கோட்டை முற்றுகையின்போது முதன் முறையாக வன்னியத்தேவர் அக்கோட்டையிலிருந்து வெளியேறி வேற்றிடம் சென்றார். அத்தியுத்திக்கோட்டைப் போரில் சடைக்கத்தேவர் காயமுற்றார். ஆகவே சடைக்கத்தேவரை தனுஷ்கோடித்தீவுக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தாமே சமர் புரியலானார் வன்னியத்தேவர். irAppayyan ammAnai #3 இராமப்பயயன் அம்மானை -#4 ஆனால், ராமப்பய்யனுக்குத் திருமலை நாயக்கர் அவசரக் கடிதமொன்றை அனுப்பினார். வடக்கே விஜயநகரப்பேரரசரிடமிருந்து திருமலை நாயக்கருக்கு S.O.S. செய்தி ஒன்று வந்திருக்கிறது. இராமப்பய்யன் அம்மானை - "இராயரிட காயிதமும் நலமுடனே தானெழுதி முகிலருடன் பாட்சா முப்பதினாயிரம் குதிரை கணவாயை வந்து கட்டிக்கொண்டார் என்று சொல்லி கோலக்கொண்டையான் குதிரை கூட்டப்பெருந்தளமும் இராயரிட சீமையெல்லாம் நாலு திக்கும் கொள்ளையிட்டு விசையாபுரமும் வே லூரும் கொள்ளையிட்டு கணவாய்க் கோட்டையெல்லாம் கட்டிக்கொண்டான் என்று இங்கு வர பயணமாயிருக்கிறான் என்று சொல்லி இராயரிட காயிதமும் நமக்கு வந்ததென்று சொல்லி மன்னன் புலிராமனையும் வரவழைக்க வேண்டுமென்று" 'முப்பதினாயிரம் பேர் கொண்ட குதிரைப் படையுடன் முகலாயர், தக்காணத்தின் முக்கிய கணவாயைப் பிடித்துக்கொண்டார்கள். இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் கோல்க்கொண்டா சுல்த்தான் தனக்குப் போட்டியாக இருந்த பீஜாப்பூரையும் விஜயநகரத்தின் அப்போதைய தலை நகரமாகிய வேலூரையும் விஜயநகரத்தின் பிரதேசங்களையும் தன்னுடைய குதிரைக்கூட்டங்களைக்கொண்ட பெரும்படையையும் வைத்துக் கொள்ளையடித்து, கணவாயில் இருந்த கோட்டையெல்லாம் கைப்பற்றிக் கொண்டான்', என்ற விபரம் தாங்கிய கடிதமொன்று ராயரிமிருந்து வந்தது. இதில் உள்ள - முகிலருடன் பாட்சா - முகலாயர் பாதுஷா; கோலக்கொண்டையான் - கோல்க்கொண்டா சுல்த்தான்; இராயர் - விஜயநகரப்போரசர்; விசையாபுரம் - பீஜாப்பூர்; வேலூர் - ஆர்க்காடு வேலூர். கஸ்னி முஹம்மத் முதன்முதலில் பஞ்சாபைக் கைப்பற்றிக் கொண்டான். அவனுக்குபின் வந்த கோரி முஹம்மத் கங்கைச் சமவெளி வரைக்கும் கைப்ப்ற்றிக்கொண்டான். அவனுக்குப் பின்வந்தவர்களால் ஏற்பட்டது டில்லி சுல்த்தானேட். முஹம்மத் துக்லக் மதுரைவரைக்கும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தினான். அவனுக்குப் பின்னால் நாடு பல பகுதிகளாகியது. இருந்தாலும் மூன்று பெரிய நாடுகள் இருந்தன. டில்லி சுல்த்தானேட், பாமினி சுல்த்தானேட், விஜயநகரம். இவற்றில் பாமினி சுல்த்தானேட் ஐந்து சிறிய சுல்த்தானேட்டுகளாகச் சிதறியது. இந்த ஐவரில் நால்வர் ஒன்றாகச் சேர்ந்து விஜயநகரத்தின் தலைநகரத்தை அழித்து, வட பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர். அதன்பின்னர் அவற்றில் இரண்டாகிய பீஜாப்பூர், கோல்க்கொண்டா ஆகியவை விஜயநகரத்தின் பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றிக்கொண்டன. விஜயநகரத்தின் கீழ்ப்பட்ட நாயக்கர்களின் உதவியால் ஓரளவுக்கு ஈடுகொடுத்துக்கொண்டு பெயரளவில் விஜயநகரம் இருந்தது. திருமலை நாயக்கர் காலத்தில் அது வேலூரைத் தலைநகரமாக வைத்துக்கொண்டு சிறிய பிரதேசமாக விளங்கியது. அதனைப் போன்ற பலமடங்கு பெரிதாக விளங்கிய அதனுடைய அடிமை அரசுகளின் தயவில்தான் வாழ்ந்தது. வடக்கில் இருந்த டில்லி சுல்த்தானேட் மிகவும் வலுவற்ற நிலையில் இருந்தபோது மாங்கோலியர் வழி வந்த முகலாயர் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். முகலாயப் பேரரசின் விஸ்தரிப்பு ஆரம்பித்தது. அக்பர் காலத்தில் அஹமத்நகர் முதலிய மூன்று சுல்த்தானேட்களையும் முகலாயர் பிடித்துக்கொண்டனர். அதன் பின்னர் பீஜாப்பூர், கோல்க்கொண்டா ஆகியவற்றின்மீது அழுத்தம் கொடுத்தனர். இந்தக் காலகட்டத்தில்தான் இராமப்பய்யன் சேதுநாட்டின்மீது படையெடுத்திருந்தான். irAppayyan ammAnai #4 ஆகவே மிக விரைவாக மதுரைக்குச்சென்று திருமலை நாயக்கரைச் சந்தித்து, அவரிடம் விபரம் கேட்டுக்கொண்டு, அவருடைய ஆணையின் பேரில் ஒரு பெரும்படையைத் திரட்டிக் கொண்டு சென்று ராயரைச் சந்தித்தார். ராயரிடம் சன்னத்து வாங்கிக்கொண்டு பெங்களூர் சென்று பாடி இறக்கி, இக்கேரி வேங்கடகிருஷ்ணையாவுக்கு நிருபம் அனுப்பி, அவரை இன்னொரு பக்கம் தாக்கச்செய்து, தாமும் முஸ்லிம் படைகளைத் தோற்கடித்து விரட்டி அடித்தர். அவர்களிடமிருந்து ஆயிரம் குதிரைகள், அறுபது யானைகளையும் எண்பது ஒட்டகமும் கைப்பற்றிக்கொண்டு வந்தார். மனமகிழ்ச்சி கொண்ட ராயர், ராமப்பய்யனைத் தம்முடனேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் திருமலை நாயக்கர் கண்ணீர் விடுவார் என்று சொல்லி, விடைபெற்று தாம் கோல்க்கொண்டாவிலிருந்து கைப்பற்றிய யானை குதிரை ஒட்டகங்களுடன் மதுரை திரும்பினார். மீண்டும் உத்தரவு பெற்று சேது நாட்டுப்போருக்குத் திரும்பினார். போகலூர் என்னும் கோட்டையைப் பிடித்து அதன் தலைவர்களாகிய அழகன், குமரன் ஆகியோரைச் சித்திரவதை செய்து கொடூரமான முறையில் கொன்று அவர்களின் மனைவிமாரையும் அவமானப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளவைத்தார். இராமேஸ்வரம் தீவுக்குள் சென்று பாதுகாப்பாய் இருந்த சேதுபதியைப் பிடிக்க, இராமப்பய்யன் அந்த ஜலசந்தியின் குறுக்கே அணை கட்டினார். அங்கே கிடைத்த ஆட்கள் அனைவரையும் அணை கட்டச்செய்தார். அணை கட்டிய பின்னர் அணையில் ராமப்பய்யன் படை வரும்போது, வன்னியத்தேவர் 'பெண்டுகனாச்சி' என்னும் பெரும் கப்பலொன்றைக் கொண்டுவரச்செய்து, 'இராமர், இலட்சுமணர்' என்ற பெயர்களைக் கொண்ட இரண்டு பெரிய பீரங்கிகளை ஏற்றிக்கொண்டுவந்தார். அணையருகே போர் புரிந்தனர். எரிவாணம் முதலியவறையும் எறிந்து, குழலால் - பீரங்கியால் சுட்டார். உண்டைபட்டு - பீரங்கிக்குண்டு பட்டு பலர் மாய்ந்தனர். சினம் கொண்ட ராமப்பய்யன் உடனே ஈழத்து மன்னனுக்குக் கடிதம் எழுதினார். அங்கிருந்த போர்த்துகீசியரையெல்லாம் உதவிக்கு அழைத்தார். இராமப்பய்யன் அம்மானை - "சிங்களத்துப் பரங்கிகளைச்சேர அழையுமென்றான் மன்னார் பரங்கிகளை கூட்டி அழையுமென்றான் கக்ஷப் பறங்கிகளைக் கடுக அழையுமென்றான் தீவுப் பறங்கிகளைச் சேர அழையுமென்றான் கொச்சிப் பறங்கிகளைக் கூட அழையுமென்றான் இலங்கைப் பறங்கிகளை இங்கே அழையுமென்றான் துலுக்காணத்துள்ள சோங்கு நறுமாவும் தோணில் படகிலுள்ள பறங்கியெல்லாம் எல்லாப் பறங்கிகளை இங்கே அழையுமென்றான்" அனைத்துப் பறங்கிமாரும் தங்கள் கப்பல்களுடன் வந்து ராமேஸ்வரம் தீவை முற்றுகையிட்டுத் தாக்கினர். வன்னியத்தேவருக்கும் பறங்கியருக்கும் இடையே பலத்த கடற்போர் நடந்தது. முதற்போரில் வன்னியத்தேவர் வென்றார். இதைக்கண்ட பறங்கியர் இன்னும் பல பறங்கியரைத் தமிழகத்திலிருந்து வரவழைத்துப் போர் புரிந்தனர். போர் தொடர்ந்து தரையிலும் நடந்தது. கடுமையாகப் போர் புரிந்து, வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த வன்னியத்தேவருக்கு வைசூரி நோய் கண்டது. இதனால் மனம் பரிதவித்த சடைக்கத்தேவர் வேதியரை அழைத்து ராமப்பய்யனுக்கு எதிராக வேள்வி செய்யச்சொன்னார். யாகம் வளர்த்த நான்காம் நாள் ராமப்பய்யனுக்கு முதுகில் பிளவை கொண்டது. காலிலும் பிளவை கொண்டது. உடலின் மற்ற பாகங்களிலும் பிளவை ஏற்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் மறைத்துக்கொண்ட ராமப்பய்யன், போரை இன்னும் விஸ்தீரணப்படுத்தினார். பாம்பனில் போர் நடந்தது. அப்போரில் நோயுற்றிருந்த வன்னியத்தேவர் சென்று கலந்து கொண்டார். போரில் வெற்றியடைந்து திரும்பிய வன்னியத்தேவர், ராமப்பையனிடம் சரணடைந்துவிட்டு சௌகரியாமக இருக்குமாறு சடைக்கத்தேவருக்கு புத்திமதி சொல்லிவிட்டு இறந்துபோனார். வன்னியத்தேவரின் மனைவி தீப்பாய்ந்து மேலுலகம் சென்றாள். அதன் பின்னர் சடைக்கத்தேவர் இராமப்பய்யனிடம் அடைக்கலமானார். அவரைச் சிறை செய்து அவமானப்படுத்தி, மதுரைக்குக் கொண்டுவந்தார். திருமலைநாயக்கர், அவரை ஆரைக்கோட்டை என்னும் இடத்தில் விலங்கு பூட்டி அடைத்துவைக்க்ச்செய்தார். ராமப்பய்யனை நாயக்கர் கௌரவப்படுத்தினார். அப்போது, திருமால் சடைக்கத்தேவருக்குக் காட்சி கொடுத்தார். பூட்டியிருந்த கால் விலங்கு 'கலீரென தான் தெரித்து போனது'. அதை அறிந்த திருமலை நாயக்கரும் சடைக்கத்தேவரை அழைத்துவரச்செய்து அவரை மீண்டும் சேதுநாட்டுக்கு அனுப்பிவைத்தார் சடைக்கத்தேவரும் இராமநாதபுரம் திரும்பி செங்கொல் நடாத்தி மாயன் அருளால் மண்டலத்தை ஆண்டிருந்தார். இதுதான் 'இராமப்பய்யன் அம்மானை'யின் சாராம்சம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக