எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

புதன், 7 அக்டோபர், 2009

உனக்குள் இருக்கிறது உன்னதம்-11



நீங்கள் ஒரு குழந்தையாய் இருந்தபோது அமைதியும் ஆனந்தமும் உங்கள் இயல்பாகவே இருந்தது. எப்போதும் ஆனந்தமாகவே இருப்பீர்கள். எப்போதாவது, யாரவது உங்கள் ஆனந்தத்தைக் கெடுப்பார்கள். ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எப்போதும் வருத்தமாகவே இருக்கிறீர்கள். எப்போதாவது யாரவது உங்களை ஆனந்தப் படுத்த வேண்டி இருக்கிறது.
உங்கள் அமைதி முற்றாகத் தொலைந்து போய்விட்டால் என்ன செய்கிறீர்கள்? வீட்டிற்குப் போய் எல்லாரையும் சத்தம் போடுகிறீர்கள். உங்கள் கணவரையோ, மனைவியையோ, குழந்தையையோ கோபித்துக் கொள்கிறீர்கள். உங்கள் அமைதியின்மைக்கு முதல் பலி அவர்கள் தான்.
அடுத்த நாளும் உங்கள் அமைதியின்மை தொடருமேயானால் உங்கள் அண்டை வீட்டுக்காரரிடம் சண்டை போடுகிறீர்கள். இதே மனநிலை தொடர்ந்தால் சக பணியாளர்களிடம் சத்தம் போடுகிறீர்கள். அமைதியின்மை அப்படியே தொடர்ந்தால் உங்கள் முதலாளியிடமே சத்தம் போடுகிறீர்கள்.
நீங்கள் முதலாளியிடம் சத்தம் போட்டதுமே உங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதைச் சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிகிச்சைக்கு உங்களை அழத்துச் செல்கிறார்கள். மனநல மருத்துவர் உங்களிடம் பேச்சுக் கொடுத்து உங்களை அமைதிப் படுத்தப் பார்க்கிறார். அதுவும் முடியாத போது, உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுக்கிறார். ஒரு சிறு மாத்திரைதான். அதை விழுங்கிய மாத்திரத்தில், அதுவரை பதட்டத்தில் இருந்த உங்கள் உடலும் மனமும் அமைதியாகிவிடுகிறது. அது தற்காலிகமானது தான் என்றாலும், உங்களுக்கு உடனே அமைதி ஏற்படுகிறது. அந்த மாத்திரையில் இருப்பதென்ன? ஒரு சில ரசாயனங்கள் தான். அவை உங்களுக்குள் சென்று உங்களை அமைதிப்படுத்துகின்றன. இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், அமைதி என்பதே ஒருவிதமான ரசாயனம் தான். ஆனந்தம் என்பதும் ஒரு ரசாயனம்தான். பதட்டம் என்பதும் ஒரு ரசாயனம் தான். ஒவ்வொரு மனித அனுபவமுமே அவ்வப்போது உங்களுக்குள் ஏற்படுகிற ரசாயன மாற்றங்களின் வெளிப்பாடுகள்தான்.
எனவே, யோகா என்னும் எளிய முறையின் வழியாக உங்களுக்குள் அமைதியும், ஆனந்தமும் இயல்பாகவே ஏற்படுவதற்கான ரசாயனத்தை உங்களுக்குள் உருவாக்க முடியும். குழந்தையாக இருந்த போது அந்த ரசாயனம் உங்களுக்குள் இருந்தது. வாழ்க்கையின் அடிப்படை புரியாமல் அனைத்தையும் குழப்பிக் கொண்டதால், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறீர்கள். சிலரைக் கொந்தளிக்கச் செய்ய யாராவது தூண்டிவிட வேண்டும். சிலரைக் கொந்தளிக்கச் செய்ய சில எளிய காரணங்களே போதும். அந்த அளவிற்குக் கொந்தளிப்பில் நிபுணராகி விட்டீர்கள். காரணமே இல்லாமல் கோபப்பட அவர்களால் முடியும்.
எனவே, உங்களுக்குள் ஒரு ரசாயன மாற்றத்தினை இயல்பாகவே ஏற்படுத்தக் கூடிய விஞ்ஞானத்திற்கு யோகா என்று பெயர். யோகா என்றதுமே விசித்திரமான கோணங்களில் உங்கள் உடலை வளைத்துக் கொள்வதென்று கருதி விடாதீர்கள். யோகா என்பது உங்களுக்குள் அந்த மாற்றத்தை நீங்களாக விரும்பி ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம். புறநிலையில் நீங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை. உள்நிலையில் ஏற்படுகிற மாற்றம் அது.
ஒரு மனிதன் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதைத் தன்னுடைய இயல்பாகவே கொண்டால், அவனது வாழ்க்கை ஆனந்தத்தைத் தேடுவதாக இருக்காது. ஆனந்தத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்.
இன்று மனிதன் தன் சுயநலத்திற்காக உலகைச் சிதைக்கத் தொடங்கியிருக்கிறான். ஒவ்வொரு தாவரமும், புழுவும், பூச்சியும், பறவையும், விலங்கும், பூக்களும், மனிதனின் மகிழ்ச்சிக்காக சித்திரவதைக்கு ஆளாகின்றன. தன் மகிழ்ச்சிக்கு விலையாக இந்தப் பிரபஞ்சத்தையே தந்தும் கூட மனிதன் மகிழ்ச்சியை உணரவில்லை. அமைதியை உணரவில்லை. நல்ல வேளையாக உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதம் சோம்பேறிகள். இல்லையென்றால், அவர்களும் சுயநலத்தோடு செயல்கள் புரிந்து இந்த உலகத்தை மேலும் சிதைத்திருப்பார்கள். இன்றைய உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது மந்தனின் செயல்கள் அல்ல; மனிதனின் சோம்பேறித்தனம் தான். மனிதனுடைய அறிவும், அன்பும், பரிவும் அல்லவா இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும்?
எனவே, இதற்கான பரிமாணத்தை நாம் உணரத் தொடங்கினால், வெளியே உங்களைச் சுற்றி நடைபெறுகிற சம்பவங்களைச் சார்ந்திராமல் அமைதியானவராகவும் ஆனந்தமானவராகவும் நீங்களே வாழ்வதற்குரிய வழி யோகா என்பது புரியும். வெளியுலகம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை. எவ்வளவுதான் அறிவியலும் தொழில் நுட்பமும் முன்னேறினாலும் கூட வெளிச்சூழல் முழுக்க முழுக்க உங்களுக்கு விருப்பமான விதங்களில் அமையப் போவதில்லை. நீங்கள் வளர்க்கும் நாய்கூட உங்கள் கட்டளைப்படி முழுமையாக நடப்பதில்லை. குறைந்த்து உங்கள் உள் தன்மையாவது நீங்கள் விரும்புகிற விதமாய் அமைய வேண்டுமில்லையா? எனவே உங்களையாவது நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
அன்பாகவும், அமைதியாகவும் இருப்பதுதான் உங்கள் இயல்பு. ஏனெனில், உங்கள் உள்நிலை ரசாயனம் இயற்கையாகவே அப்படித்தான் இருக்கிறது. ஒரு மனிதனின் செயல்திறன் முழுமையாக வெளிப்படுவதென்பதே உள்நிலையில் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்போது தான். எனவே தொழிலில் சிறக்க வேண்டுமென்றாலும், பணியில் சிறக்க வேண்டுமென்றாலும், கல்வியிலோ, அனுபவத்திலோ மேம்பட வேண்டுமென்றாலும், அல்லது குடும்பத்துடன் வாழ வேண்டுமென்றாலும் உள் தன்மையை ஒரு மனிதன் சீர் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் தனக்கு மட்டுமன்றி, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அவன் தீமை விளைவித்துக் கொள்கிறான்.
அமைதியில்லாத நிலை உங்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் இருப்பதில்லை தான். ஆனால் ஒரு நாளில் ஏற்படுகிற ஐந்து நிமிடப் பதட்டம் கூட உங்கள் வாழ்வைப் பாழ்படுத்தி விடக் கூடும்.. எனவே, வெளியில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் முடிவு செய்ய முடியாவிட்டாலும், உங்களுக்குள் என்ன நடக்க வேண்டும் என்பதையாவது நீங்களே முடிவு செய்தாக வேண்டும்.
அப்படி முடிவு செய்கிற, நிலைக்கு நீங்கள் வந்துவிட்டால் வெளிச் சூழலில் நிகழ்கிற எதுவும் உங்களைப் பாதிக்காது. ஒன்று கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நீங்கள் விரும்பியது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் நீங்கள் அமைதியாக ஆனந்தமாக வாழ்வீர்கள்.
முழுக்க முழுக்க வெளிச் சூழலைச் சார்ந்தே உங்கள் வாழ்க்கை இருப்பதால்தான் துன்பம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதனால்தான் வாழ்க்கையின் ஒரு பகுதி துன்பம் என்று மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். துன்பம் என்பது வாழ்வின் ஒரு பாகமென்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவீர்கள் என்றால் அவர்களுக்கு அதைவிடப் பெரிய அநீதியை நீங்களே இழைக்க முடியாது. அமைதியாக – ஆனந்தமாக வாழக்கூடிய வாய்ப்பு இருப்பதையே அவர்கள் மனங்களிலிருந்து அகற்றியவர்கள் ஆவீர்கள். உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தால் கூட அவர்களுக்கு உங்களையும் அறியாமல் தீமை செய்கிறீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக