எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

புதன், 7 அக்டோபர், 2009

பொடிக்கவிகள் சி.சேதுபதி

தமிழில் கொடிக்கவி உண்டு; சீட்டுக்கவியும் உண்டு; பொடிக்கவி என்று உண்டா? எனும் கேள்வி, தலைப்பைப் பார்த்தவுடன் எழுவது இயற்கைதான். உண்மையில் பொடிக்கவிகளும் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன.மனிதர்கள் வெவ்வேறுவிதமான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள். அதிலும் கவிஞர்களுக்கென்றே சில நூதனப் பழக்கங்கள் இருப்பதுண்டு. அவற்றுள் மூக்குப்பொடி போடும் பழக்கம் ஒன்று. மூக்குப்பொடிப் போடும் பழந்தமிழ்க் கவிராயர்களுள் ஒருவர், பழனிப்பதியில் வசித்த மாம்பழக்கவிச்சிங்க நாவலர். கவி பாடுவதில் வல்லவர்.இவர், ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தில், மன்னர் பொன்னுசாமித்தேவர் முதலியோர் இருக்கும் அவையில், தமிழ் குறித்துப் பேசும்போது, எவரும் அறியாத வண்ணம், வெகு சாமர்த்தியமாய்ப் பொடி டப்பியில் இருந்து பொடியை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம்.ஒருநாள், அவரது பொடிடப்பியை, மன்னர் எடுத்து வைத்துக்கொள்ள, அறியாத புலவர் பொடிடப்பியைத் தேடத் தொடங்கினார். அதனைக் கண்ணுற்ற மன்னர், ""புலவரே பிரசங்கத்தின் இடையில், நீங்கள் தேட முயன்ற காரியம், இன்னதெனச் சொல்லுக'' என்றதும், ""புரவலர் பெருமானே, உமது அருமைச் சமூகத்தில் அஞ்சாது அறிவிக்கும் அளவிற்கு, அது அத்துணைப் பெரிய காரியம் இல்லை'' என்றார் புலவர்.உடனே மன்னன், ""அது, "பொடி'க்காரியமோ?'' என்றார். "ஆம்' என்றார் புலவர். மன்னன், ""முருகனின் மீது ஒரு வெண்பாவில் ஐந்து பொடி வருமாறு பாடினால், தங்களின் காரியத்தை அனுகூலப்படுத்தலாம்'' என்றார். உடனே புலவர்,""கரும்பொடி மாவஞ்ச வெறிகைப்பொடி சில்வெற்பர்தருங்கொம் பொடிசை தெய்வத்தையல் - விரும்புபுயவான்பொடியா நின்ற கதிர்மானு மயிலோ எனையாள்தேன்பொடியார் பூம்பதந் தந்தே''என்று பாடிமுடித்தார் புலவர். கரும்பொடி, கைப்பொடி, தருங்கொம்பொடி, வான்பொடி, தேன்பொடி என ஐந்து பொடிகள் அடங்கிய பாடலின் பொருள் இதுதான். ""கரும்பை ஒடித்துத் தின்னும் (மா) யானைகள் அஞ்சும் படியாக வீசும் "பொடிசில்' என்னும் ஒருவிதக் கையாயுதத்தைக் கொண்ட மலைக்குறவர் தரும் கொம்பு போன்ற வள்ளி தேவியுடன், இசைந்த தெய்வ குஞ்சரி விரும்பும் பன்னிரு புயங்களைக் கொண்டவரே, வானைப் பொடிக்கின்ற - சுடுகின்ற சூரியனைப் போன்ற வடிவேலரே, தேனின் மகரந்தப்பொடி பொருந்தும் உமது தாமரைப் பூம்பாதம் தந்து என்னை ஆண்டருள்'' என்று பொருள்.இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் பொன்னுசாமித் தேவர், தங்கத்தால் அமைந்த நவரத்தினம் பதித்த விலை உயர்ந்த பொடிடப்பி ஒன்றினைப் பரிசாகத் தந்து மகிழ்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக