எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

புதன், 7 அக்டோபர், 2009

புதுக்கோட்டையில் ரோமாபுரி

திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,
மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)
நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு சென்னை,புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக