ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம்.
கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.
வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.
திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.
டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.
தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.
மோட்ச ராமானுஜர் : இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர்
மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.
காவிரி நீர் அபிஷேகம்! : ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.
ஆடிப்பெருக்கு திருவிழா : ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.
கம்பருக்கு அருளிய நரசிம்மர் : கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.
மூன்று பிரம்மோற்ஸவம் : சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, "ஆதி பிரம்மோற்ஸவம்' என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி, ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப் படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.
அமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
தானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.
கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி! : ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார
பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.
நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்: மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயகப்படுகின்றன.
தல வரலாறு:
இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக