சங்ககாலத்தின் இறுதியில் தமிழக வரலாற்றில் ஒருவித இருள் சூழ்ந்து கொண்டது. தொன்றுதொட்டு தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர, சோழ, பாண்டியரை களப்பிரர் என்ற ஒரு கூட்டத்தினர் வென்று தங்களது ஆட்சியை நிலை நிறுத்தினர். தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகள் தமிழகத்தை தடுமாறச் செய்த களப்பிரர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே வண்டிவண்டியாக கருத்து வேற்றுமை உண்டு.
ஆனால் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.
களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக