பெயர்க்காரணம்: கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திருநாமம் "செண்பகவல்லி' ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் "நாதன் கோயில்' என்று ஆனது.
நந்தி சாபம் விலகிய தலம்: நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு,""எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,''என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர்,""பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,''என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், "நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,''என்று அருள்பாலித்தார்.
தலச்சிறப்பு: சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார்.
தலபுரணம்:திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக