பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா
-திருமங்கையாழ்வார்
தலபெருமை:
மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு சுவாமி, தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர். திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது. பரமபதவாசல் கடக்கும் தாயார்: பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி நடக்கிறது. ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று இவள் சொர்க்கவாசல் வழியே செல்கிறாள். பங்குனி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்.எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று, சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப, சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார். பங்குனி உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் சுவாமி, இரண்டு தாயார்களுடன்சேர்ந்து காட்சி தருவதை தரிசிப்பது விசேஷம். தல வரலாறு: ரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, "கமலவல்லி' (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண் டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச்சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.