தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் சிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே மற்ற இரு கோயில்களும் அமைந்திருக்கிறது.பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம் எனக்கர சென்னுடை வானாள் அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுந்தவெம் மண்ணல் வம்புலாஞ் சோலைமாமதில் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.
-திருமங்கையாழ்வார்
தலபுரணம்:பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், ""எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் "தஞ்சமாபுரி' எனப்பட்டது.தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக